வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல்


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல்
x
தினத்தந்தி 7 April 2021 5:55 PM GMT (Updated: 7 April 2021 5:55 PM GMT)

திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையம்
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு அவினாசி பல்லடம், தாராபுரம் காங்கேயம் உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விடிய, விடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கல்லூரிக்கு வந்த வண்ணம் இருந்தது. கடைசியாக அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று அதிகாலை வந்து சேர்ந்தன.
8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கட்டுப்பாட்டு எந்திரங்கள் விவிபேட் ஆகியவை 8 கட்டிடங்களில் தனித்தனியாக அறைகளில் வைக்கப்பட்டன.
அறைக்கு சீல்
திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில், பொது பார்வையாளர்கள் ரவிசங்கர் பிரசாத்தாராபுரம், காங்கேயம், சந்தர் பிரகாஷ் வர்மா உமானந்தா டோலி திருப்பூர் வடக்கு, மாஷீர் ஆலம் திருப்பூர் தெற்கு பல்லடம் கபில் மீனா உடுமலை, மடத்துக்குளம் மற்றும் வேட்பாளர்கள் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் எந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளிட்ட பகுதிகளில் 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களில் பதிவாகும் வீடியோ காட்சிகளை கண்காணிக்கும் வகையில் வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
3 அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 2 துணை கமிஷனர்கள் 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் 15 இன்ஸ்பெக்டர்கள், 36 சப்இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படை உள்ளுர் போலீசார் துணை ராணுவ படையினர் உள்பட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 8 மணி நேரத்துக்கு ஒரு ஷிப்டு என்ற அடிப்படையில் 3 ஷிப்டுகளில் போலீசார் சுழற்சி முறையில் காவல்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முன்பு துணை ராணுவ வீரர்கள், அதற்கு அடுத்து ஆயுதப்படை போலீசார், வளாகத்தில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். இதுதவிர கல்லூரி வளாகத்தை சுற்றி உயர்கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறார்கள். வளாகம் முழுவதும் இரவு நேரத்தில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
போலீஸ் கமிஷனர்
இந்த ஆய்வு பணியில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாகுல் அமீது பொது, முரளிதேர்தல், தேர்தல் தாசில்தார் முருகதாஸ், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறையினர், போலீசார், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story