காங்கிரஸ்-அ.தி.மு.க.வினர் மோதல்


காங்கிரஸ்-அ.தி.மு.க.வினர் மோதல்
x
தினத்தந்தி 7 April 2021 6:19 PM GMT (Updated: 7 April 2021 6:19 PM GMT)

தேவகோட்டை அருகே காங்கிரஸ், அ.தி.மு.க.வினர் மோதி கொண்டனர். கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே காங்கிரஸ், அ.தி.மு.க.வினர் மோதி கொண்டனர். கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

கார் கண்ணாடி உடைப்பு

தேவகோட்டை அருகே உள்ள சிறுநல்லூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பிரபாகரன். இவர் காங்கிரஸ் கட்சியின் தேவகோட்டை தெற்கு வட்டார தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பாண்டியன்(வயது60) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
 இதை தொடர்ந்து நேற்று முன்தினம் வாக்குப்பதிவின் போது அதே ஊரைச் சேர்ந்த வைரவன்(35) என்பவர் காங்கிரஸ் கட்சி பூத் ஏஜெண்டாக இருந்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு செல்லும்போது அவரை, பாண்டியன், ராஜேஷ், ஆனந்த் ஆகியோர் சேர்ந்து தாக்கி உள்ளனர். அதோடு ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரனின் காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து திருவேகம்பத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

எச்.ராஜா கண்டனம்

அதே போல் அ.தி.மு.க. பிரமுகரான பாண்டியன் தன்னை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்திக், தென்னவன், ஜீவா, வைரவன், பிரபாகரன் மற்றும் பலர் சேர்ந்து தாக்கியதாக திருவேகம்பத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே காயம் அடைந்த பாண்டியன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா நேரில் சென்று ஆறுதல் கூறினார். பாண்டியன் கொடுத்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத ேபாலீசாருக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்தார். இது பற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபாபதி மருத்துவமனைக்கு வந்து எச்.ராஜாவிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Next Story