காட்டுத்தீ பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்


காட்டுத்தீ பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 7 April 2021 6:43 PM GMT (Updated: 7 April 2021 6:49 PM GMT)

நீலகிரி வனக்கோட்டத்தில் காட்டுத்தீ பரவலை தடுக்க வனத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் உறைபனி தாக்கம் காணப்பட்டது. பின்னர் மார்ச் மாதம் பரவலாக மழை பெய்ததால், உறைபனி தாக்கம் இல்லாமல், நீர்பனி தாக்கம் இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது.

போதிய மழை பெய்யாததால் வனப்பகுதிகளில் உள்ள புற்கள், செடிகள், கொடிகள் காய்ந்தும், கருகிய நிலையிலும் காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ பரவும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கவர்னர்சோலை, ஊட்டி வடக்கு, ஊட்டி தெற்கு, கட்டபெட்டு, கோத்தகிரி, தொட்டபெட்டா, குந்தா உள்பட 11 வனச்சரகங்கள் நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ளன. இந்த வனப்பகுதிகளை ஒட்டி வசித்து வரும் பொதுமக்களுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதில் வனப்பகுதிக்குள் நெருப்பு வைத்த சிகரெட் துண்டுகளை போடக்கூடாது. வனப்பகுதியை ஒட்டிய சாலையோரங்களில் சமையல் செய்யக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் வனப்பகுதியை ஒட்டி குப்பைகளை தீ வைத்து எரிக்க கூடாது.

வன வளத்தை பாதுகாத்தால் மழை வளம் பெறலாம். காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது வன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தவிர நஞ்சநாடு, தும்மனட்டி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கோரகுந்தா வனச்சரகத்தை ஒட்டி கேரள மாநிலம் உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க 6 மீட்டர் அகலத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

11 வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியிலும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகிறது. காட்டுத்தீ குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமங்களில் போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. காட்டுத்தீ ஏற்பட்டால் உடனடியாக வனத்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story