மாவட்ட செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்4 மையங்களில் வைப்பு + "||" + Electronic voting machines Deposit in 4 centers

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்4 மையங்களில் வைப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்4 மையங்களில் வைப்பு
மதுரை மாவட்டத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது
மதுரை
மதுரை மாவட்டத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை மையம்
தமிழக சட்டன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. இங்கு 3,856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 
மதுரை மேலூர், கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஒத்தக்கடை விவசாய கல்லூரியிலும், சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகமலைபுதுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழகத்திலும், மதுரை வடக்கு, தெற்கு, மத்தி, மேற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக்கல்லூரியிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக்கிலும் நடக்கின்றன.
அறைகள் சீல் வைப்பு
தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. அதனை 300 மண்டல அலுவலர்கள் ஒவ்வொரு மண்டலமாக வாக்கு பதிவு எந்திரங்களை சேகரித்து அந்தந்த வாக்குப்பதிவு எண்ணும் மையங்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் கொண்டு போய் சேர்த்தனர். திருமங்கலம், சோழவந்தான், மேலூர் ஆகிய தொகுதிகளுக்கான எந்திரங்கள் நேற்று காலை 8 மணி வரை அந்தந்த மையங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.
அந்தந்த மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. பின்னர் வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் விவரம் குறித்து தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர்
ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு அடுத்ததாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும், அடுத்ததாக உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு 4 மையங்களில் சுமார் 2 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.
அதுதவிர வேட்பாளர்களின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கான வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனித்தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இல்லாத அரசியல் கட்சி முகவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு
இதுதவிர அந்த அறை முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது தான் அந்த அறைகளின் சீல் உடைக்கப்பட்டு அங்கிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.