கருமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 3 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி போட்டு உயிருடன் மீட்பு


கருமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 3 மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க ஊசி போட்டு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 7 April 2021 7:12 PM GMT (Updated: 7 April 2021 7:12 PM GMT)

கருமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மயக்க ஊசி போட்டு உயிருடன் மீட்டனர்.

மணப்பாறை, 

கருமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மயக்க ஊசி போட்டு உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் விழுந்த காட்டெருமை

திருச்சி மாவட்டம், கருமலையை அடுத்த எண்டபுளி அருகே உள்ள அழகாஸ்திரிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் சுமார் 2 வயதுள்ள காட்டெருமை ஒன்று விழுந்து கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த  துவரங்குறிச்சி வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மயக்க ஊசி செலுத்தி தான் காட்டெருமையை மீட்க முடியும் என்பதால், கோவையில் இருந்து கால்நடை மயக்கமருந்து நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு

இதையடுத்து மயக்க மருந்து செலுத்தும் டாக்டர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் கிரேன் மூலம் கிணற்றுக்குள் இறங்கி, துப்பாக்கி மூலம் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் கிணற்றில் சுற்றிக் கொண்டே இருந்த காட்டெருமை மயங்கியது.
 
உடனே தீயணைப்பு துறை வீரர்கள் 4 பேர் காட்டெருமை கயிற்றால் கட்ட முயன்ற போது காட்டெருமை மீண்டும் எழுந்து விட்டது. பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பின்பு, காட்டெருமையை கயிறு கட்டி, கிரேன் மூலம் ேமலே கொண்டுவந்தனர். பின்னர் அது லாரியில் ஏற்றப்பட்டது. 

வனத்துறையினர் அதன் கயிற்றை அவிழ்க்க முயற்ற போது, அது மீண்டும் எழுந்து நின்றது. இதனால்  வனத்துறையினர் வாகனத்தில் இருந்து கீழே குதித்து விட்டனர். இதனால் அது மீண்டும் கிரேன் மூலம் அருகில் உள்ள காட்டில் இறக்கி விடப்பட்டு கயிறு அவிழ்த்து விடப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப்பின் காட்டெருமை மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story