வீடுகள் மீது கல்வீசிய 4 பேர் கைது


வீடுகள் மீது கல்வீசிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2021 7:16 PM GMT (Updated: 7 April 2021 7:16 PM GMT)

தா.பழூர் அருகே வீடுகள் மீது கல் வீசியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் பூங்குன்றன். இவரது வீட்டின் அருகே வசிக்கும் திருநாராயணசாமி என்பவர் அடிக்கடி தனது வீட்டில் அதிக சத்ததுடன் பாட்டு கேட்டுள்ளார். இது அருகில் வசிப்பவர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் நேற்று முன்தினம் பூங்குன்றன், திருநாராயணசாமியிடம் பாட்டு சத்தத்தை குறைத்து வைத்துக் கொள்ளுமாறு கூறினார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருநாராயணசாமி மற்றும் அவரது கோஷ்டியினர் பூங்குன்றனை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது வீட்டின் மீது கற்களை வீசியும், அவரது கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தா.பழூர் போலீசில் பூங்குன்றன் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிலரை பாதிக்கப்பட்டவர்களே பிடித்து தா.பழூர் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வெளியில் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் அதிருப்தி அடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் தா.பழூர் போலீஸ் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக கும்பகோணம்-ஜெயங்கொண்டம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக இடங்கண்ணி கீழத்தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் நாராயணசாமி (வயது 50), வடக்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாக்யராஜ் (33), கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திக் (26), தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த தேன்மணி மகன் பிரபு (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story