2,091 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு


2,091 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு
x
தினத்தந்தி 7 April 2021 7:20 PM GMT (Updated: 7 April 2021 7:20 PM GMT)

4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான 2 ஆயிரத்து 91 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

காரைக்குடி,

4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான 2 ஆயிரத்து 91 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

பலத்த பாதுகாப்புடன்... 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை தனி, திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதையடுத்து பதிவான 2 ஆயிரத்து 91 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் லாரிகளில் ஓட்டு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.
ஏற்கனவே ஓட்டு எண்ணும் மையத்தில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை தயார் செய்யப்பட்டு இருந்தது. 

பூட்டி சீல் வைப்பு

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 91 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற பார்வையாளர்கள் சோனாவனே, முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த அறையை சுற்றி மொத்தம் 180 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது 324 போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, காரைக்குடி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரன், திருப்பத்தூர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து, சிவகங்கை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவன், மானாமதுரை தனி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story