மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறையவில்லை- கலெக்டர் விஷ்ணு பேட்டி


மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறையவில்லை- கலெக்டர் விஷ்ணு பேட்டி
x
தினத்தந்தி 7 April 2021 7:33 PM GMT (Updated: 7 April 2021 7:33 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறையவில்லை என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறையவில்லை என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு தொகுதி வாரியாக தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையை கலெக்டர் விஷ்ணு மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டன. இவ்வாறு 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உரிய எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் பாதுகாப்புடன் மூடி சீல் வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்குப்பதிவு சதவீதம்

நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலின்போது 66.54 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 9 லட்சத்து 3 ஆயிரத்து 770 பேர் இந்த தேர்தலில் வாக்களித்து உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. வழக்கமாக சட்டமன்ற தேர்தலின்போது நெல்லை மாவட்டத்தில் 65 முதல் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகும். இந்த தேர்தலில் 66.54 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் தற்போது பதிவாகி உள்ள வாக்கு சதவீதம் என்பது குறைவானது அல்ல.

கண்காணிப்பு கேமரா

வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேர சி.சி.டிவி கேமரா கண்காணிப்பு பணியில் இருக்கும். வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையின் சி.சி.டிவி கேமரா காட்சிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் அனைத்து கட்சியினரும் பார்க்கும் வகையில் ஒளிபரப்பு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு, துணை கமிஷனர்கள் சீனிவாசன், மகேஷ் குமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story