குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா


குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 7 April 2021 7:38 PM GMT (Updated: 7 April 2021 8:26 PM GMT)

மேட்டுப்பாளையம் அருகே குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தில் குஞ்சப்பனை ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 23-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

பொரிச்சாட்டுதல், அக்னி கம்பம் நடுதல், திருவிளக்கு பூஜை வழிபாடு, பால்குடம் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், அக்னிகுண்டம் திறத்தல், அக்னி குண்டத்தில் பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு சிகரம் வைத்தாற்போல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து நாதஸ்வர இசையுடன், மேள,தாளம் முழங்க அம்மன் அழைத்து வரப்பட்டு கோவிலை அடைந்து அதன் பின்னர் காலை 7 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. 

தலைமை பூசாரி வெள்ளிங்கிரி குண்டத்தை வலம் வந்து குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.அவரைத் தொடர்ந்து உதவி பூசாரிகள் குண்டம் இறங்கினார்கள்.

அவர்களை தொடர்ந்து ஆண், பெண், சிறுவர்,சிறுமிகள் பக்தியுடன் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் தலைவர் சென்னியப்பன் நாடார், உதவித் தலைவர் மணி அய்யாசாமி கிருஷ்ணசாமி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யப்பட்டது. 2000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. வருகிற 13-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Next Story