வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு


வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 8:18 PM GMT (Updated: 7 April 2021 8:18 PM GMT)

தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்;
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம். திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 2,886 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டன. அந்த பணி முடிந்ததும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் ஏற்றி ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை
தஞ்சை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 3 இடங்களில் தொகுதி வாரியாக மின்னணு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு தொகுதியில் பதிவான வாக்குகள் தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
“ஸ்ட்ராங் ரூம்” என்று அழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு துணை ராணுவ படையினர் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர. இவர்களுக்கு அடுத்து தமிழ்நாடு சிறப்பு போலீசார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பணியில் உள்ளனர். ஓட்டு எண்ணும் மையங்களின் நுழைவு வாயில்களில் மூன்றாவது வளையமாக தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 அடுக்கு பாதுகாப்பு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைக்கு அருகில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணைநிலை ராணுவம், சிறப்பு போலீஸ் படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் தங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு தனித்தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தந்த மையங்களில் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தேர்தல் பொது பார்வையாளர்கள் அகரம் பாஷா, சார்மால், சூரிய மணி லால் சந்த், தஞ்சை மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன், தஞ்சை தொகுதி தேர்தல் அதிகாரி வேலுமணி மற்றும் திருவையாறு. ஒரத்தநாடு தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அப்போது அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
24 மணி நேரமும் கண்காணிப்பு
வருகிற மே 2ந்தேதி வாக்குகள் எண்ணப்படும் வரை 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதன் மீது என்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story