சென்னிமலை அருகே வாக்குச்சாவடி மீது 2 ஆலமரக்கிளைகள் முறிந்து விழுந்தன ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக மீட்பு


சென்னிமலை அருகே வாக்குச்சாவடி மீது  2 ஆலமரக்கிளைகள் முறிந்து விழுந்தன ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 7 April 2021 8:27 PM GMT (Updated: 7 April 2021 8:27 PM GMT)

சென்னிமலை அருகே வாக்குச்சாவடி மீது 2 ஆலமரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

சென்னிமலை அருகே வாக்குச்சாவடி மீது 2 ஆலமரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.
ஓட்டுப்பதிவு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தலையொட்டி ஒரு வாக்குச்சாவடியும், இதன் அருகிலேயே உள்ள மற்றொரு பள்ளிக்கூடத்தில் ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த வாக்குச்சாவடிகளில் பசுவபட்டி ஊராட்சியை சேர்ந்த 2 ஆயிரத்து 501 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
ஆலமரம்
வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் அலுவலர்கள் ஒவ்வொரு ஊராக சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து கொண்டு வந்ததால் அவர்கள் வரும் வரை பசுவபட்டி பள்ளிக்கூடத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்தல் அலுவலர்களும், போலீசாரும் பசுவபட்டி ஊர் மக்களோடு சேர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பாக பள்ளிக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் வாக்குப்பதிவு நடந்த பள்ளிக்கூடத்துக்கு அருகே இருந்த பழமை வாய்ந்த பெரிய ஆல மரக்கிளை ஒன்று ‘சட சட’ என்ற சத்தத்துடன் முறிந்து விழுவதற்கான நிலையில் இருந்துள்ளது.
கிளை முறிந்து விழுந்தது
இதனை கண்ட தேர்தல் அலுவலர்களும், ஊர் பொதுமக்களும் பயந்து உடனடியாக வாக்குப்பதிவு எந்திரங்களை பள்ளிக்கூடத்தில் இருந்து பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் 2 மரக்கிளைகள் வெவ்வேறு திசைகளில் முறிந்து விழுந்துள்ளது.
இதில் ஒரு மரக்கிளை வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த பள்ளிக்கூட கட்டிடம் மீது விழுந்தது. இதனால் மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. மேலும் பள்ளிக்கூடம் அருகே உள்ள பசுவபட்டி ஊராட்சி அலுவலகம் மீதும் மரக்கிளை விழுந்ததால் ஊராட்சி அலுவலகத்தின் மேற்கூரை ஓடுகள் உடைந்து விழுந்தது. 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலமரக் கிளையை தாங்கி பிடிப்பதற்கு விழுதுகள் இல்லாததால் முறிந்து விழுந்து உள்ளது என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story