நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 12,317 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 12,317 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 April 2021 8:30 PM GMT (Updated: 7 April 2021 8:45 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,317 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் பெயர் அந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,285 ஆக குறைந்தது.

இதற்கிடையே நேற்று பரமத்திவேலூரை சேர்ந்த 13 வயது சிறுவன் உள்பட 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,317 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 14 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் இதுவரை 11,978 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் பலியான நிலையில் 228 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ? என்கிற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் அதற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டது.

Next Story