பர்கூர் அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு


பர்கூர் அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 April 2021 8:30 PM GMT (Updated: 7 April 2021 8:48 PM GMT)

பர்கூர் அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தி தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட காரகுப்பம் ஊராட்சி எமக்கல்நத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக அ.தி.மு.க., தி.மு.க. ஏஜெண்டுகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரனை தி.மு.க.வினர் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

பின்னர் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதை அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் விரைந்து சென்று அ.தி.மு.க., தி.மு.க.வினரை அழைத்து பேசினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. 
எம்.எல்.ஏ. மீது தாக்குதல், கார் கண்ணாடி உடைப்பு குறித்து பர்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன், கட்சி நிர்வாகிகள் வெங்கடேசன், ரமேஷ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story