ஆசனூர் அருகே வனப்பகுதி வழியாக வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்த யானை


ஆசனூர் அருகே வனப்பகுதி வழியாக வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்த யானை
x
தினத்தந்தி 7 April 2021 9:18 PM GMT (Updated: 7 April 2021 9:18 PM GMT)

ஆசனூர் அருகே வனப்பகுதி வழியாக வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச்சென்ற லாரியை யானை வழிமறித்தது.

ஆசனூர் அருகே வனப்பகுதி வழியாக வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச்சென்ற லாரியை யானை வழிமறித்தது.
வாக்குப்பதிவு தாமதம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம், ஆசனூர், கெத்தேசால், கோட்டமாளம், கோட்டாடை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில்  தொலை தொடர்பு வசதி கிடையாது. இந்தநிலையில் கோட்டமாளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவின்போது எந்திர கோளாறு ஏற்பட்டது.
இதனால் கோட்டமாளம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து தாளவாடியில் இருந்து கொண்டு் செல்லப்பட்ட மாற்று எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடந்தது. இதனால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கி இரவு 7 மணிக்கு முடிவடைந்தது.
யானைகள் வழிமறித்தது
வாக்குப்பதிவு முடிந்ததும் எந்திரங்கள் லாரியில் ஏற்றப்பட்டன. பின்னர் அதிகாரிகள், போலீசாருடன் இரவு அங்கிருந்து லாரி புறப்பட்டு கோபியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்றுகொண்டு இருந்தது.
இந்தநிலையில் ஆசனூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது ரோட்டின் குறுக்கே குட்டியுடன் ஒரு யானை நின்றுகொண்டிருந்தது. இதைப்பார்த்த போலீசாரும், அதிகாரிகளும் அச்சமடைந்து லாரியை சற்று தூரத்திலேயே நிறுத்த சொன்னார்கள். அதன்படி டிரைவர் லாரியை நிறுத்தினார். 
அதிகாரிகள் அவதி
நீண்ட நேரம் அந்த யானை குட்டியுடன் ரோட்டில் அங்கும் இங்குமாக நடமாடியபடியே இருந்தது. இதனால் அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதற்கிடையே யானைகளை தங்கள் செல்போனிலும் அதிகாரிகள் படம் பிடித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.
அதன்பின்னரே லாரி புறப்பட்டு கோபி வாக்கு எண்ணும் மையத்தை அடைந்தது. 

Related Tags :
Next Story