கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்


கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 April 2021 9:33 PM GMT (Updated: 7 April 2021 9:33 PM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2- வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
நீர்மட்டம் குறைந்தது
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி அதிகபட்சமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.97 அடியாக உயர்ந்தது. அதன்பின்னர் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையின் நீர்மட்டம் கூடுவதும், குறைவதுமாக இருந்து வந்தது. எனினும் 90 அடிக்குள்ளே நீடித்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் சரிவர மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 90 அடியில் இருந்து 89.93 அடியாக குறைந்தது.
தண்ணீர் திறப்பு நிறுத்தம்
இதற்கிைடயே பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி முதல் 2-ம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இம்மாதம் 30-ந் தேதிவரை மொத்தம் 6 சுற்றுகளாக திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 4-வது சுற்று தண்ணீர் கடந்த மாதம் 22-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. அப்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.93 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,223 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் குடிநீருக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story