வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து பாதுகாப்பு அறைகளுக்கு சீல்- 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து பாதுகாப்பு அறைகளுக்கு சீல்- 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 10:10 PM GMT (Updated: 7 April 2021 10:10 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்து அங்குள்ள பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்து அங்குள்ள பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
4 இடங்களில்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் வைத்து எண்ணப்படுகின்றன. மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய 4 தொகுதிளில் பதிவான வாக்குகள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியிலும், ஏற்காடு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அம்மாபேட்டை கணேஷ் கல்லூரியிலும், ஆத்தூர், கெங்கவல்லி தொகுதியில் பதிவான வாக்குகள் தலைவாசல் மாருதி பாலிடெக்னிக் கல்லூரியிலும், எடப்பாடி, சங்ககிரி ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் சங்ககிரி விவேகானந்தா கல்லூரியிலும் வைத்து எண்ணப்படுகின்றன.
பூட்டி சீல் வைத்தனர்
இந்த மையங்களுக்கு நேற்று காலை வரையிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் சட்டசபை தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்களை பிரித்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகளில் அடுக்கி வைத்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு அறைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
சேலம் அம்மாபேட்டை கணேஷ் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தெற்கு தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அம்மாபேட்டை கணேஷ் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும், 2-வதாக தமிழ்நாடு சிறப்பு படை போலீசாரும், 3-வதாக உள்ளூர் போலீசாரும் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மே 2-ந் தேதி வரை போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் இந்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். மேலும், வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story