சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் இருப்பு; கோடை காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது


சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் இருப்பு; கோடை காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது
x
தினத்தந்தி 8 April 2021 1:30 AM GMT (Updated: 8 April 2021 1:30 AM GMT)

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம என 4 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளதால் கோடை காலம் முழுவதும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்யலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

75 சதவீதம் தண்ணீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த 4 ஏரிகளிலும் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி 4 ஏரிகளிலும் 8.705 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.இது மொத்த கொள்ளளவில் 75 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே நாளில் 6.341 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும்.இதில் தற்போது 1.901 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் 1.081 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது அந்த ஏரியில் 762 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 

புழல் ஏரியின் கொள்ளளவு 3.300 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 3.024 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3.018 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும்.

தட்டுப்பாடின்றி குடிநீர்
இந்த தண்ணீரை கொண்டு கோடைகாலம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் வினியோகம் செய்யலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5-வது ஏரியான கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 483 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.இதன் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும். பூண்டி ஏரிக்கு அடுத்த மாதம் தொடக்கத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடின்றி அனைத்து இடங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story