ஆவடி சட்டமன்ற தொகுதியில் ஒரே அறையில் வைத்து வாக்குகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தி.மு.க. வேட்பாளர் புகார் மனு


ஆவடி சட்டமன்ற தொகுதியில் ஒரே அறையில் வைத்து வாக்குகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தி.மு.க. வேட்பாளர் புகார் மனு
x
தினத்தந்தி 8 April 2021 2:25 AM GMT (Updated: 8 April 2021 2:25 AM GMT)

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 2-ந் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா தலைமையில் வாக்குச்சாவடிகளில் இருந்து எடுத்து வரப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் அறையில் பாதுகாப்பாக வைத்து அந்த அறைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது ஆவடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சா.மு.நாசர் மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது,

ஆவடி தொகுதியில் பதிவான வாக்குகளை 2 அறைகளில் தனித்தனியாக பிரித்து வாக்கு எண்ணும் முயற்சியில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆவடி தொகுதியை விட மாதவரம் தொகுதி பெரிய தொகுதியாகும். அந்தத் தொகுதிக்கு மட்டும் ஒரே அறையில் வாக்கு எண்ணிக்கை எண்ணப்படுகிறது. ஆனால் ஆவடி தொகுதிக்கு மட்டும் இரண்டு அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எங்களுக்கு ஆட்சேபனையும் உள்ளது. எனவே மாவட்ட தேர்தல் நிர்வாகம் ஒரே அறையில் வாக்குகளை எண்ண முயற்சி செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பொன்னையா அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story