கடலூர் அருகே மணிலா அறுவடை பணிகள் தீவிரம்


கடலூர் அருகே மணிலா அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 8 April 2021 3:10 PM GMT (Updated: 8 April 2021 3:10 PM GMT)

கடலூர் அருகே மணிலா அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர், 

நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படும் பயிர்களில் ஒன்று மணிலா. ஆடி மாதத்தில், மானாவாரி பயிராக மணிலா சாகுபடி செய்யப்படும். மேலும் கிணற்று பாசனத்தில் கார்த்திகை, மார்கழி மாதத்தில் இறைவை பயிராகவும் மணிலாவை சாகுபடி செய்யலாம்.

இந்த இறைவையில் பயிரிடப்பட்டுள்ள மணிலா செடிக்கு, ஊட்டச்சத்து கரைசலைத் தெளிப்பதன் மூலம் அதிக மகசூலை பெற முடியும். அந்த வகையில் கடலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கார்த்திகை பட்டத்தில் மணிலா சாகுபடி செய்ய முயன்றனர். அப்போது தொடர்ந்து 2 மாதங்கள் கடலூர் பகுதியில் கனமழை பெய்ததால் விளைநிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

அறுவடை

இதையடுத்து மழை ஓய்ந்து, விளை நிலங்களில் தண்ணீர் வடிந்ததும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குறுகிய கால பயிரான மணிலாவை விவசாயிகள் சாகுபடி செய்தனர். பின்னர் அவற்றுக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு பராமரித்து வந்தனர். இதனால் மணிலா பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாரானது.

இதையடுத்து விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த மணிலா பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் மணிலா அதிகளவில் விளைச்சலை கொடுத்துள்ளதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக விளைச்சல்

இதுகுறித்து கடலூர் அடுத்த சாவடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், நாங்கள் எப்போதும் கார்த்திகை பட்டத்தில் தான் மணிலா சாகுபடியில் ஈடுபடுவோம். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, காலதாமதமாக சாகுபடி செய்தோம். இருப்பினும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சலை கொடுத்துள்ளது. தற்போது அறுவடை செய்த பயிர்களை விருத்தாசலம், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒருங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

Next Story