விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்


விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 April 2021 3:48 PM GMT (Updated: 8 April 2021 3:48 PM GMT)

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் காலம் தாழ்த்தியதால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. அறுவடை நேரங்களில் மட்டும் இங்கு ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும். கடலூர் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் அறுவடை செய்யும் நெல், மணிலா, உளுந்து உள்ளிட்ட விளை பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இவ்வாறு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை வியாபாரிகள் எடைபோட்டு கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விருத்தாசலம்-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விளைபொருட்களை விரைவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  

எடைபோடும் தொழிலாளர்கள்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எடை போடும் தொழிலாளர்கள் 60 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, வியாபாரிகள் மூலம் சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. இதில் பிரச்சினை ஏற்பட்டதால் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டது. எடை போடும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்பட்டு விவசாயிகளின் விளை பொருட்கள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட நிர்வாகம் தெரிவித்தது.
பின்னர் விவசாயிகளின் விளை பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story