தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் படுகாயம்


தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண்  படுகாயம்
x
தினத்தந்தி 8 April 2021 4:30 PM GMT (Updated: 8 April 2021 4:30 PM GMT)

பல்லடம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பல்லடம்
பல்லடம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தொகுப்பு வீடு
பல்லடம் அருகேயுள்ள, ஆறுமுத்தாம்பாளையம் காலனி பகுதியில் வசிப்பவர்களுக்கு, கடந்த 1993-ம் ஆண்டு் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது. இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து விட்டன. மீதியுள்ள வீடுகளில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டும், எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
 சிலர் மராமத்து பணி செய்து வசித்து வருகின்றனர். இந்த வீடுகளை பராமரிப்பு செய்து சீரமைத்து தர வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. 
பெண் படுகாயம் 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி அளவில், வீரமலை என்பவர் வசிக்கும் தொகுப்பு வீட்டின் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதில் வீரமலை மனைவி வளர்மதிக்கு (வயது 33)  பலத்த காயம் ஏற்பட்டது. கைகள் விரல்கள் பாதிக்கப்பட்டன. உடனடியாக அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களது குழந்தைகள் மேற்கூரை விழுந்த இடத்திற்கு சற்று தள்ளி படுத்து தூங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொகுப்பு வீட்டின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்த இடத்தில் குழந்தைகள் இருந்திருந்தால் உயிர்பலி ஏற்பட்டிருக்கும். தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்து தரச் சொல்லி அரசிடம் பலமுறை கேட்டும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன், பராமரிப்பு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story