மாவட்ட செய்திகள்

கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை + "||" + murder

கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை

கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை
தாராபுரம் அருகே மதுக்கடை பாரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.
குண்டடம்
தாராபுரம் அருகே மதுக்கடை பாரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மனு எழுதிக்கொடுப்பவர் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர்  ஜான் வெஸ்லி (வயது 58). இவர் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து அங்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதிக்கொடுத்து வந்தார். இவருடைய மனைவி கமலா (50). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.  இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். 
ஜான்வெஸ்லியின் நண்பர் அதே பகுதியை சேர்ந்த சங்கிலி (58). இவர் போர்வெல் லாரியில் வேலை செய்து வருகிறார். தினமும் மாலையில், ஜான்வெஸ்லியும்,  அவருடய நண்பர் சங்கிலியும், சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடை பாரில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. 
தகராறு
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில், ஜான் வெஸ்லியும், அவருடைய நண்பர் சங்கிலியும், சந்திராபுரத்தி்ல் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று, அங்கு மதுவாங்கி அருகில் உள்ள  பாரில் வைத்து, குடித்துக்கொண்டிருந்தனர்.  மதுபோதை அதிகமானதும், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர்  அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கிலி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து, ஜான் வெல்ஸியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜான் வெல்ஸிக்கு, உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தக் காயங்களுடன், ஜான் வெஸ்லி தனது வீட்டிற்கு வந்தார். அங்கு பாரில் நடந்த விவரத்தையும், சங்கிலி தாக்கிய விவரத்தையும் மனைவியிடம் தெரிவித்தார். 
சாவு
அதன்பின்னர் ஜான் வெஸ்லி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டில் படுத்துக்கொண்டார். இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும், ஜான் வெஸ்லி படுக்கையை விட்டு  எழுந்திருக்க வில்லை. இதையடுத்து அவருடைய மனைவி அவரை எழுப்ப முயன்றார். அப்போது ஜான்வெஸ்லியின் உடம்பு முழுவதும் எறும்பு கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவர் இறந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசுக்கு கமலா தகவல் தெரிவித்தார். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஜான் வெஸ்லி உடலை பார்வையிட்டனர். 
அப்போது அவருடைய உடலில் பல்வேறு இ்டங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்திராபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில், ஜான் வெஸ்லிக்கும்,  சங்கிலிக்கும் இடையே மதுபோதையில் ஏற்பட்ட  தகராறில், சங்கிலி அருகில் கிடந்த கட்டையை எடுத்து ஜான் வெஸ்லியை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் ஜான் வெஸ்லி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறாததால், உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சங்கிலியை  தேடி வருகிறார்கள்.