முககவசம் அணிவதை கட்டாயமாக்க வலியுறுத்தல்


முககவசம் அணிவதை கட்டாயமாக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 April 2021 5:34 PM GMT (Updated: 8 April 2021 5:34 PM GMT)

வேகமாக உருவெடுத்து வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி, 
வேகமாக உருவெடுத்து வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வலியுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா 
கடந்த ஆண்டு சீனா நாட்டில் பரவிய கொரோனா படிப்படியாக நாடு முழுவதும் வேகமாக பரவி ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு சுமார் 6 மாதங்கள் வரை நீடித்ததால் இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. 
இதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி 2-வது அலையை உருவாகி உள்ளது. இதையடுத்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரோனாவை தடுக்கும் வகையில் நேற்று மத்திய அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  நாளை (சனிக்கிழமை) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 
சிக்கல்
இந்தநிலையில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுஇடங்களில் கூடும் நேரத்தில் முக கவசம் அணியாமல் இருந்து வருகின்றனர். இதனால் கொரோனா பரவல் தடுப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் பொது இடங்களில் கூடும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.
கட்டாய முக கவசம்
இந்நிலையில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ் நிலையம், கடை வீதிகள், சந்தை பகுதி, விளையாட்டு மைதானம், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதியில் கூடும் மக்கள் முக கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறியதாவது:- ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பல்வேறு பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 
இருப்பினும் தங்களது உயிர் முக்கியம் என்பதை உணர்ந்த மக்கள் போதிய தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 
அபராதம்
காரைக்குடி பகுதியில் வாரச்சந்தை, தேனீர் கடை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதியில் கூடும் பொதுமக்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாமலும் முககவசம் அணி யாமல் செல்வதால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் வகையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் முக கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை கட்டாயமாக முக கவசம் அணிய செய்ய வேண்டும். மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story