தொழிலாளி கொலை முயற்சி வழக்கில் கோவில் தர்மகர்த்தா உள்பட 4 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை


தொழிலாளி கொலை முயற்சி வழக்கில் கோவில் தர்மகர்த்தா உள்பட 4 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை
x
தினத்தந்தி 8 April 2021 5:55 PM GMT (Updated: 8 April 2021 6:38 PM GMT)

ராசிபுரம் அருகே தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கில் கோவில் தர்மகர்த்தா உள்பட 4 பேருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவில் தர்மகர்த்தா சுப்பிரமணி (60) என்பவருக்கும் இடையே தேர்தல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ம் தேதி அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடந்தது அப்போது சண்முகம் அவரது தாயார் தேன்மொழி மற்றும் குடும்பத்தினர் சுப்பிரமணி வீட்டு முன்பு மஞ்சள் நீராடினர்.

அப்போது சுப்பிரமணிக்கும், சண்முகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சுப்பிரமணி அவரது மகன்கள் கனகராஜ் (35), கவுரிசங்கர் (28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி (40) ஆகியோர் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் சுப்பிரமணியை தாக்கினர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் சுப்பிரமணி மற்றும் அவரது மகன்கள் உள்பட 4 பேர் மீது கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்த வழக்கு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீலாக தங்கதுரையும், வக்கீல் விஜயனும் வாதாடினர். நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார். 
அதில் சுப்பிரமணி, அவரது மகன்கள் கனகராஜ், கவுரிசங்கர் மற்றும் கந்தசாமி உள்பட 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனையும் விதித்தார். மேலும் சண்முகம் மற்றும் அவரது தாய் தேன்மொழி ஆகிய இருவருக்கும் ரூ.62 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

Next Story