தோகைமலை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த மர வியாபாரி


தோகைமலை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த மர வியாபாரி
x
தினத்தந்தி 8 April 2021 6:02 PM GMT (Updated: 8 April 2021 6:02 PM GMT)

தோகைமலை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த மர வியாபாரி மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோகைமலை
மரவியாபாரி 
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாங்கினம் ஊராட்சி வரகூரில் ஜக்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 6-ந்தேதி மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி அன்று இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. இதனை பார்ப்பதற்காக பாப்பக்காப்பட்டி ஊராட்சி தாசில்நாயகன்னூரை சேர்ந்த முத்துவேல் (வயது 38) மரவியாபாரி, அவரது நண்பர் சிவாஜி என்பவருடன் வந்திருந்தார். அப்போது, திடீரென சிவாஜியுடன் இருந்த முத்துவேலை காணவில்லை. இதனால் சிவாஜியை அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தேடியும் முத்துவேல் கிடைக்கவில்லை.
பிணமாக மீட்பு
இந்தநிலையில், நேற்று காலை ஜக்கம்மாள் கோவில் அருகே உள்ள 70 அடி கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 
பின்னர் மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாருடன் கிணற்றில் இறங்கி அந்த வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் நடத்தி விசாரணையில், அந்த வாலிபர் திருவிழாவில் காணாமல்போன முத்துவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து முத்துவேலுவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் முத்துவேல் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
போலீசார் விசாரணை
இந்தநிலையில் முத்துவேலின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால் அவரது இறப்பில் மர்மம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, முத்துவேல் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story