நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா; 8 தெருக்களுக்கு சீல் வைப்பு


நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா; 8 தெருக்களுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 8 April 2021 6:30 PM GMT (Updated: 8 April 2021 6:30 PM GMT)

நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 8 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

நெல்லை, ஏப்:
நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், கொரோனா பாதித்த பகுதியில் 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

13 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
நெல்லை பேட்டை செந்தமிழ் நகர் பகுதியில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

இதையடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேருக்கு பேட்டை சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு குழந்தை தவிர 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை அறிந்த நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுப்படி சுகாதார பணியாளர்கள், மருத்துவ குழுவினர் நேற்று அங்கு விரைந்து சென்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு அமைந்திருக்கும் பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினி தெளித்தனர். மேலும் அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதி என பேனர் வைத்தனர். 

காய்ச்சல் தடுப்பு மருந்துகள்

மேலும், அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, யாருக்காவது காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதுதவிர வீடு, வீடாக சென்று காய்ச்சல் தடுப்பு மருந்துகளும், கபசுர குடிநீரும் வழங்கினர்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் ஒரு பெண் மற்றும் அவருடைய 6 வயது மகனுக்கும், நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் 5 பேருக்கும் என்.ஜி.ஓ. காலனியில் ஒரு பெண் மற்றும் 9 வயது மகனுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

8 தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு

நெல்லையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெருமாள்புரத்தில் 5 தெருக்களுக்கும், பேட்டையில் 2 தெருக்களுக்கும், டவுனில் ஒரு தெருவுக்கும் என மொத்தம் 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் கவச உடை அணிந்து சென்று பிளீச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நோயாளிகள் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தால், அவர்கள் வெளியே செல்லாத வகையில் போலீசார் மூலமும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story