நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயில்; வெப்பத்தில் இருந்து தப்பிக்க பழச்சாறு- தர்பூசணி கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்


நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயில்; வெப்பத்தில் இருந்து தப்பிக்க பழச்சாறு- தர்பூசணி கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்
x
தினத்தந்தி 8 April 2021 7:10 PM GMT (Updated: 8 April 2021 7:10 PM GMT)

நெல்லை கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பழச்சாறு, தர்பூசணி கடைகளுக்கு மக்கள் படையெடுத்து செல்கின்றனர்.

நெல்லை, ஏப்:
நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க பழச்சாறு, தர்பூசணி கடைகளுக்கு படையெடுக்கிறார்கள்.  

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெல்லையில் வெயில் சுட்டெரிக்கிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துவதால், அனல் காற்று வீசுகிறது. சாலைகளில் புழுதி பறந்த வண்ணம் இருக்கிறது.இதனால் சாலைகளில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் கூட வெப்பம் அதிகமாக உள்ளது. 

பொதுமக்கள் அவதி

அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பமாக உள்ளது. ஆனால் தற்போதே வெயில் வாட்டி வதைப்பதால் நெல்லை நகரவாசிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.

வீடுகளில் உள்ள மின்விசிறி, ஏ.சி. உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. அவை நாள் முழுவதும் ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. பகல் நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள் குடை பிடித்தப்படியும், பெண்கள் துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் செல்வதையும் பார்க்க முடிகிறது.

பழச்சாறு கடைகள்

கோடை வெயில் ஆரம்பித்து விட்டாலே சாலையோரங்களில் தர்பூசணி, கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, பதநீர், இளநீர் உள்ளிட்ட இயற்கை பானங்கள் மற்றும் குளிர்ப்பான கடைகள் புற்றீசல்கள் போல் வரத்தொடங்கி விடும். இதனால் நெல்லை மாநகரில் சாலையோரங்களில் இயற்கை பான கடைகள் அதிகளவில் காணப்படுகின்றன. வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அந்த கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். 

தர்பூசணி, நுங்கு, பதநீர், இளநீர், கம்பங்கூழ், கேப்பை கூழ், மோர் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பானங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி பருகுகின்றனர். மேலும் குளிர்ப்பானங்கள் விற்பனையும் அதிகரித்து உள்ளது. சாலையோரங்களில் ஆங்காங்கே தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ஒரு தர்பூசணி ரூ.30 முதல் ரூ.130 வரை விற்பனை ஆகிறது. கரும்புச்சாறு ஒரு டம்ளர் ரூ.15-க்கும், இளநீர் ரூ.30 முதல் ரூ.40 வரையும், நுங்கு ரூ.15 முதல் ரூ.20 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் வாங்கி பருகி வருகின்றனர்.
 கோடை வெயிலால் குற்றாலம் அருவிகளும் வறண்டு கிடக்கின்றன.

Next Story