திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணி முடிந்து துணை ராணுவத்தினர் புறப்பட்டனர் சிறப்பு ரெயிலில் லக்னோ பயணம்
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவ படையினர், நேற்று சிறப்பு ரெயில் மூலம் லக்னோ புறப்பட்டு சென்றனர்.
திருச்சி,
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவ படையினர், நேற்று சிறப்பு ரெயில் மூலம் லக்னோ புறப்பட்டு சென்றனர்.
தேர்தல் பாதுகாப்பு பணி
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு பணிக்காக வட மாநிலங்களில் இருந்து துணை ராணுவப் படையினர் சிறப்பு ரெயில்கள் மூலம் வந்திருந்தனர்.
தற்போது தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் அவர்கள் பணிபுரிந்த இடங்களில் மீண்டும் பணியை தொடர நேற்று புறப்பட்டுச் சென்றனர்.
ரெயில் நிலையத்தில் குவிந்தனர்
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சுமார் 1500 துணை ராணுவ வீரர்கள் வந்து இருந்தனர். வாக்காளர்களை அச்சமின்றி வாக்களிக்க வீதியில் அணிவகுப்பு நடத்தினர். மேலும் வாக்குப்பதிவு அன்று ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ படையினர் நேற்று பல்வேறு வாகனங்களில் தங்கள் உடைமைகளுடன் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்து குவிந்தனர்.
பாதுகாப்பு துப்பாக்கி மற்றும் கவச உடைகள், தங்களது துணிமணிகளுடன் வந்தனர். மேலும் சில இடங்களில் தாங்களே சமையல் செய்து சாப்பிடும் வகையில் கொண்டு வந்த பாத்திரங்கள், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவைகளையும் கையோடு எடுத்து வந்தனர்.
லக்னோ பயணம்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் 7-வது பிளாட்பாரத்தில் சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டிருந்தது. பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரெயிலில் தங்கள் உடைமைகளுடன் ஏறி அமர்ந்த துணை ராணுவ படையினர், அங்கிருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு பயணமானார்கள்.
தேர்தல் பாதுகாப்பு பணியினை சிறப்பாக மேற்கொண்டதாகவும், எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடத்தப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் துணை ராணுவ வீரர் ஒருவர் பெருமையுடன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story