ஆலங்குளத்தில் காதல் மனைவி கொலையில் சலூன் கடைக்காரர் உள்பட 4 பேர் கைது


ஆலங்குளத்தில் காதல் மனைவி கொலையில் சலூன் கடைக்காரர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 April 2021 1:07 AM IST (Updated: 9 April 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் காதல் மனைவி கொலையில் சலூன் கடைக்காரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம், ஏப்:
ஆலங்குளத்தில் காதல் மனைவி கொலையில் சலூன் கடைக்காரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காதல் மனைவி கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராஜகோபால் (வயது 28). இவர் பக்கத்து ஊரான முத்துகிருஷ்ணாபேரியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா (22). இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்.

ராஜகோபாலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலையிலும் வீட்டில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு வேலைக்கு சென்ற மல்லிகாவை, அங்கு சென்று ராஜகோபால் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அதை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாளுக்கும் (52) கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மல்லிகா பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த மாரியம்மாளுக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. 

4 பேர் கைது

இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் மல்லிகாவின் தந்தை வீரகுமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, ராஜகோபால் மற்றும் கொலைக்கு தூண்டியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் ராஜகோபாலின் தந்தை முருகன் (51), தாய் முத்துசெல்வம் (50), தங்கை புனிதா (26) ஆகியோரை கைது செய்தனர்.
கைதான ராஜகோபால் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- 

போலீசில் புகார்

எனக்கும், மல்லிகாவுக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவேன். அப்போது எல்லாம் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்படும்.
இதுதொடர்பாக கடந்த மாதம் என் மீதும், எனது பெற்றோர் மீதும் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மல்லிகா புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் என்னை கண்டித்து அனுப்பினர். 

தகராறு

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த நான் நேற்று முன்தினம் குடித்து விட்டு வீட்டுக்கு சென்றேன். அப்போது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மல்லிகாவை சரமாரியாக குத்தினேன். அதை தடுக்க முயன்ற பக்கத்து வீட்டு பெண் மாரியம்மாளையும் கத்தியால் குத்தினேன். பின்னர் நான் தப்பி ஓடி விட்டேன். கத்திக்குத்தில் காயம் அடைந்த மல்லிகா இறந்து விட்டார். இந்த நிலையில் போலீசார் என்னை பிடித்து விட்டனர். 
இவ்வாறு ராஜகோபால் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 
கைதான ராஜகோபால் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story