சென்னை எண்ணூரில் வீட்டில் ஏ.சி. எந்திரம் வெடித்து தொழிலாளி படுகாயம்


சென்னை எண்ணூரில் வீட்டில் ஏ.சி. எந்திரம் வெடித்து தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 9 April 2021 6:02 AM IST (Updated: 9 April 2021 6:02 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் உள்ள ஏ.சி.எந்திரம் வெடித்து சிதறியதில் கூலி தொழிலாளி பலத்த தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் எண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.சி. எந்திரம் வெடித்தது

சென்னை எண்ணூர் விம்கோ நகர் சக்திபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). கூலித்தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டில் ஏ.சி.யை போட்டுவிட்டு தூங்கினார்.அப்போது திடீரென ஏ.சி. எந்திரத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இதில் அங்கு படுத்து இருந்த மணிகண்டன் உடலில் தீப்பிடித்து கொண்டது. மேலும் வீட்டில் இருந்த மெத்தை மற்றும் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

உடலில் தீப்பிடித்து எரிந்ததால் மணிகண்டன் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயங்களுடன் கிடந்த மணிகண்டனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 


Next Story