பயிர் கடன் தள்ளுபடியில் ஊழல்: கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


பயிர் கடன் தள்ளுபடியில் ஊழல்: கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 9 April 2021 8:03 PM IST (Updated: 9 April 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே பயிர் கடன் தள்ளுபடியில் ஊழல் நடந்திருப்பதாக கூறி கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.


வடமதுரை:
வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாகாநத்தம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் பாகாநத்தம் ஊராட்சியில் உள்ள மலைப்பட்டி, ஒத்தப்பட்டி, சங்கால்பட்டி, களத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் 501 விவசாயிகளுக்கு மாவட்டத்திலேயே அதிகளவில் சுமார் ரூ.5 கோடிக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் கடன் பெறாத நபர்களின் பெயர்களை சேர்த்து பல லட்சம் ரூபாய் ஊழல் செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்து வருகிறது.
இந்தநிலையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் நேற்று ஒட்டப்பட்டது. அதில் பெயர்கள் மற்றும் கடன் சம்பந்தப்பட்ட விவரங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இதை பார்த்து விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். 

முற்றுகை போராட்டம்

இதையடுத்து, ஊழலை மறைப்பதற்குதான் புரியாத வகையில் ஆங்கிலத்தில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது என எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் தரையில் அமர்ந்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பயிர்கடன் தள்ளுபடியில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story