கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தீக்குளிப்போம் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க தலைவர் பேட்டி


கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு  குடும்பத்தோடு தீக்குளிப்போம் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 9 April 2021 9:21 PM IST (Updated: 9 April 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தீக்குளிப்போம் என்று நாட்டுப்புற கலைஞர்கள் சங்க தலைவர் கூறினார்.

விழுப்புரம், 

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தங்கஜெயராஜ், தலைமை ஆலோசகர் பழனி, விழுப்புரம் மாவட்ட தலைவர் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமைதி ரங்கநாதன், நிர்வாகிகள் சந்திரசேகர், சங்கர், பாண்டுரங்கன், சிலம்பரசன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் சத்தியராஜ், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த நாட்டுப்புற கலைஞர்களும் வாழ்வாதாரம் இழந்தோம். சில கலைஞர்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு கலையை நம்பியுள்ள தெருக்கூத்து, மேடை நாடகம், பம்பை, நையாண்டி மேளம், கரகாட்டம் போன்ற நாட்டுப்புற கலைஞர்கள், தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளோம்.

கேள்விக்குறியான வாழ்வாதாரம்

இந்த ஊரடங்கில் பஸ்களில் அமர்ந்து பயணம் செல்வதற்கும், திரையரங்கு, ஓட்டல்களில் 50 சதவீத அனுமதி வழங்கியுள்ளனர். அதுபோல் சில நிகழ்ச்சிகளில் 200 பேர் கலந்துகொள்ளலாம் போன்ற தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில் திருவிழாக்களுக்கு மட்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பிரசார கூட்டங்கள் நடத்தினர், அதில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போதெல்லாம் கொரோனா தொற்று ஏற்படவில்லையா கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்பதுதான் சட்டமாக உள்ளது.
ஏற்கனவே ஓராண்டு காலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் எங்களின் வாழ்வாதாரம் மேலும் கேள்விக்குறியாகி உள்ளது.

கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி

இந்த ஆண்டு கோவிலில் திருவிழாக்கள் நடைபெறும், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கருதி நாங்கள் ஏற்கனவே முன்பணம் வாங்கினோம். ஆனால் தற்போது கோவில் விழாக்களுக்கு தடை, கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டதால் நாங்கள் பெற்ற முன்பணத்தை திருப்பி கேட்கின்றனர். குக்கிராமங்களில் உள்ள கோவில்களில் அரசு கட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை பின்பற்றி கலை நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதியளிக்க வேண்டும். 
ஆகவே கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதியளிக்க வேண்டும், இல்லையெனில் நாட்டுப்புற கலையையும், கலைஞர்களையும் காப்பாற்றும் நோக்கில் நலவாரியங்களில் உறுப்பினராக உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பம் உயிர்பிழைக்கும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த நாட்டுப்புற கலைஞர்களும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் அரசு வழங்கிய நலவாரிய அடையாள அட்டையை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நாட்டுப்புற கலைஞர்கள், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story