சின்னமனூரில் தேர்தல் தகராறில் தொழிலாளி அடித்து கொலை


சின்னமனூரில் தேர்தல் தகராறில் தொழிலாளி அடித்து கொலை
x
தினத்தந்தி 9 April 2021 9:31 PM IST (Updated: 9 April 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூரில் தேர்தல் தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னமனூர்:
சின்னமனூரில் தேர்தல் தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தேர்தல் தகராறு
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகோட்டைபட்டியை சேர்ந்தவர் பம்பையன் மகன் மயில்முருகன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர். கடந்த 6-ந்தேதி நடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி மயில்முருகன், அதே கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. சார்பில் பூத் ஏஜெண்டாக இருந்தார்.  
தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே  வாக்கு சேகரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். 
அடித்து கொலை
இதை பார்த்த மயில்முருகன், தகராறை விலக்கிவிட சென்றார். அப்போது அவரையும் சிலர் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மயில்முருகன், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, மயில்முருகன் நேற்று இறந்தார். 
இதற்கிடையே இருதரப்பினர் தகராறு தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த 11 பேர் மீது சின்னமனூர் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்கிடையே மயில்முருகன் இறந்ததை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்தநிலையில் மயில்முருகனை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும், இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் சின்னமனூர் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனே அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மயில்முருகன் கொலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
தேர்தல் தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சின்னமனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story