உடல் கருகி முதியவர் பலி


உடல் கருகி முதியவர் பலி
x
தினத்தந்தி 9 April 2021 10:07 PM IST (Updated: 9 April 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

ரிஷிவந்தியம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே நாகல்குடி காலனியை சேர்ந்தவர் பெரியான் (வயது 70). இவருடைய மகன் சங்கர். இவர் பெரியான் வீட்டு அருகில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது பேத்தி நிரோஷாவுடன் (7) கூரை வீட்டில் பெரியான் தூங்கிக்கொண்டிருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.  இதையறிந்த நிரோஷா தூக்கத்தில் இருந்து எழுந்து அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தாள். இதனிடையே பெரியானும் வீட்டில் இருந்து வெளியே வர முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் தீ வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததால், அவரால் வெளியே வரமுடியவில்லை. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
 இதனிடையே கூரை வீ்ட்டில் சிக்கிக்கொண்ட பெரியான் உடலில் தீ பரவி எரிந்தது. இதில் வலிதாங்க முடியாமல் அலறி துடித்த அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

வீட்டு உபயோக பொருட்கள்

இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய  வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து நாசமானது. இதற்கிடையே பகண்டைகூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெரியான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story