கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்


கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 April 2021 4:47 PM GMT (Updated: 9 April 2021 4:47 PM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் கிரண்குராலா அறிவுரை வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். 
சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் கிரண்குராலா பேசியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இ-பாஸ்

ஆந்திரா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை தவிர்த்து பிற வெளி மாநிலங்களிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் இ-பாஸ் கட்டாயம் தேவை. கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை பரவலை தடுத்திடும் வகையில் அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 2 வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
 நோய் தொற்று அறிகுறி இருப்பவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை செய்ய வேண்டும். 

அபராதம்

 கொரோனா தடுப்பு பணியில் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினர் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும்.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும்.  அவ்வாறு செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 
அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி முதல்வர் உஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், துணை இயக்குனர் (சுகாதாரம்) சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜவேல், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, உதவி திட்ட அலுவலர் ரெத்தினமாலா,  நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் தாசில்தார்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story