வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
வால்பாறையில் உள்ள வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
வால்பாறை
வால்பாறையில் உள்ள வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
சிறுத்தை அட்டகாசம்
வால்பாறை நகர் பகுதியை ஒட்டி வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இதன் அருகே வாழைத்தோட்டம் ஆறு, சிறுகுன்னா மற்றும் நடுமலை ஆகிய வனப்பகுதிகள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள தேயிலை எஸ்டேட்டுக்குள் காட்டுப்பன்றிகள் அதிகளவில் உள்ளன.
எனவே அவற்றை வேட்டையாட வரும் சிறுத்தை, குடியிருப்புக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை கவ்விச்சென்று வருகிறது.
வனத்துறையினர் கண்காணிப்பு
இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர். பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் இந்த சம்பவம் நடப்பதால், பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் சிறுத்தை நுழைவது தெரியவந்தது. எனவே அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
6 இடங்களில் கேமராக்கள்
வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறத்தை புகுந்து உள்ளது.
எனவே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் சிறுத்தை நுழையும் இடம் மற்றும் சிறுத்தையை பொதுமக்கள் பார்த்த இடம் உள்பட 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அத்துடன் அந்தப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். சிறுத்தை வந்து சென்றது உறுதி செய்யப்பட்டால் அதை பிடித்து வனப்பகுதியில் விட கூண்டு வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story