கொழுமம் கோதையம்மன் குளத்தில் கோடையிலும் நீர் நிரம்பிக் காணப்படுவது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
கொழுமம் கோதையம்மன் குளத்தில் கோடையிலும் நீர் நிரம்பிக் காணப்படுவது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
போடிப்பட்டி
கொழுமம் கோதையம்மன் குளத்தில் கோடையிலும் நீர் நிரம்பிக் காணப்படுவது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
மாவட்ட எல்லை
தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக கோடைக்காலத்தில் குளங்கள் வறண்டு காணப்படுவதால் பயிர்களுக்குப் போதுமான நீர் கிடைக்காத நிலை ஏற்படும். ஆனால் நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை போதுமான அளவில் பெய்த நிலையிலும் அதன் தொடர்ச்சியாக மார்கழி மாதத்திலும் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டது.
அதேநேரத்தில் பல பகுதிகளிலுள்ள குளங்களில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதற்கு அந்த மழையும் ஒரு காரணமாக அமைந்து விட்டது. அந்தவகையில் கொழுமம் அருகில் உள்ள கோதையம்மன் குளம் கோடையிலும் வற்றாமல் நீர் நிரம்பிக் காட்சியளிப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மகிழ்ச்சி
திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் குளத்துப்பாளையத்தில் கோதையம்மன் குளம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பெரிய குளமாக கருதப்படும் கோதையம்மன் குளம் சுமார் 450 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த குளத்தின் மூலம் 550 ஏக்கர் நிலம் நேரடியாகவும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. மடத்தூர், மயிலாபுரம், என்.ஜி.புதூர், குளத்துப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்படுவதற்கு இந்த குளத்து நீர் பெருமளவில் உதவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீர் கோதையம்மன் குளத்தில் சேமிக்கப்பட்டு விவசாயிகளுக்குக் கைகொடுக்கிறது. போதிய நீர் வரத்து இல்லாமல் பெரும்பாலான கோடைக்காலங்களில் நீரில்லாமல் வறண்டு கிடக்கும் கோதையம்மன் குளம் தற்போது நீர் நிரம்பிக் காட்சியளிப்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
கிடா விருந்து
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டில்தான் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனை இந்த பகுதி மக்கள் திருவிழாவைப் போல மலர் தூவியும் கிடா விருந்து வைத்தும் கொண்டாடினர். தற்போது குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருப்பது இந்த பகுதி முழுவதும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதாக உள்ளது. விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களுக்கும் இது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story