கடும் வெயில் எதிரொலி இளநீர் கொள்முதல் விலை ரூ30 ஆக உயர்வு


கடும் வெயில் எதிரொலி இளநீர் கொள்முதல் விலை ரூ30 ஆக உயர்வு
x
தினத்தந்தி 9 April 2021 11:10 PM IST (Updated: 9 April 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

கடும் வெயில் காரணமாக இளநீர் கொள்முதல் விலை ரூ.30 -ஆக உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பொள்ளாச்சி

கடும் வெயில் காரணமாக இளநீர் கொள்முதல் விலை ரூ.30 -ஆக உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இளநீர் உற்பத்தி 

பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, கோட்டூர்,  ஆழியாறு மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் தென்னை மரங்கள் அதிமாக உள்ளன. இந்த மரங்களில் இருந்து அதிகளில் இளநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்குள்ள இளநீரின் சுவை அதிகம் என்பதால் பல இடங்களில் இருந்து விரும்பி வாங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் இருந்து தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இளநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

விலை உயர்வு 

கடந்த நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து இளநீர் உற்பத்தி அதிகரித்தாலும், பருவம் தவறி பெய்த மழையால் இளநீர் விலை சரிவை சந்தித்தது. 

மேலும் தொடர் பனி காரணமாக இளநீர் விற்பனை குறைந்து தோப்புகளில் தேங்கும் நிலை ஏற்பட்டது. 

அந்த நேரத்தில் ஒரு இளநீரின் கொள்முதல் விலை ரூ.17 என்ற அளவில் மட்டும் இருந்தது. இதனால் விவசாயிகள் லாபம் இன்றி கவலை அடைந்தனர். 

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், மீண்டும் இளநீர் விலை உயர தொடங்கியது. 

ரூ.30-க்கு கொள்முதல் 

அத்துடன் ஆந்திரா, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இளநீருக்கு தேவை அதிகரித்ததால் அதன் விலையும் உயர தொடங்கியது. 

இதையடுத்து இந்த பகுதியில் உற்பத்தியாகும் செவ்விளநீர் மற்றும் பச்சை இளநீர் லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.  

இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளியூருக்கு தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

கடும் வெயில் காரணமாக தோப்புகளில் நல்ல தரமான இளநீர் ரூ.28 முதல் ரூ.30 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

விவசாயிகள் மகிழ்ச்சி 

கடந்த மாதத்தில் ஒரு இளநீர் ரூ.24 வரைதான் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. 

தற்போது நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுவதால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story