திருவாவடுதுறை வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக விசாரணை


திருவாவடுதுறை வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக விசாரணை
x

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவாவடுதுறை வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக விசாரணை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்நாயர் தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவாவடுதுறை வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக விசாரணை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்நாயர் தலைமையில் நடந்தது.
கூடுதலாக 50 வாக்குகள் 
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட திருவாவடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 175-வது வாக்கு சாவடியில் மொத்தம் 825 வாக்குகளில் 578 வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கணக்கிட்டு் பார்த்தபோது 628 வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
பதிவான வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக இருந்ததால் அதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாதிரி வாக்குப்பதிவு நீக்கப்படாததால் கூடுதலாக 50 வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் ஏற்க மறுத்தார். 
பிரவீன்நாயர் விசாரணை
இதனால் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையம் முன்பு குவிந்த நாம் தமிழர் கட்சியினரை, துணை ராணுவ படை வீரர்கள் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட கலெக்டருமான பிரவீன்நாயர் நேற்று விசாரணை மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
புகார் மனு
அப்போது பூம்புகார் தொகுதியில் வாக்குக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், தேர்தல் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், திருவாவடுதுறை வாக்குச்சாவடியில் நடந்த குளறுபடி போல் பல வாக்குச்சாவடிகளில் குளறுபடி நடந்ததாகவும், எனவே பூம்புகார் தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.
மேலும் நாம் தமிழர் கட்சியினர் மீது தடியடி நடத்த காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேட்பாளர் காளியம்மாள் முறையிட்டதோடு, புகார் மனுவும் அளித்தார். 
தேர்தல் விதிமுறை
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் கூறுகையில், திருவாவடுதுறை வாக்குச்சாவடி மையத்தில் மாதிரி வாக்குப்பதிவு சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. மாதிரி வாக்குப்பதிவுகளை தேர்தல் அலுவலர் நீக்க தவறியதால் இந்த தவறு நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வாக்கு பெட்டி வாக்கு எண்ணும் மையத்தில் தனியாக வைக்கப்பட்டுள்ளது. எல்லா பெட்டிகளும் எண்ணிய பிறகு ‘விவிபாட்' எந்திரத்தில் பதிவான சீட்டுகளை எண்ணி கணக்கில் சேர்க்கப்படும். இதுதான் தேர்தல் விதிமுறையில் உள்ளது. மேலும் வேட்பாளர் கொடுத்துள்ள புகார் குறித்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதி முடிவை தலைமை தேர்தல் அதிகாரி எடுப்பார் என்றார். 
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.

Next Story