ராயக்கோட்டை அருகே, 13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் - போக்சோ சட்டத்தில் வழக்கு
ராயக்கோட்டை அருகே, 13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ராயக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை தாலுகா ராயக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பக்கமுள்ள சின்னேகவுண்டனஅள்ளியை சேர்ந்த டிரைவர் தேவராஜ் (வயது 24) என்பவருக்கும் கடந்த 13.01.2021 அன்று திருமணம் நடந்தது.
இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 8.4.2021 அன்று தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்றார். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சம்பவம் நடந்தது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை என்பதால் இது குறித்து மேல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கலைவாணிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் விசாரித்து சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் தேவராஜ் மீது போக்சோ பிரிவு, இளம் வயது திருமண சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story