நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பக்தர்களுக்கு அனுமதி கிடையாது


நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
x
தினத்தந்தி 10 April 2021 12:53 AM IST (Updated: 10 April 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

சமயபுரம், 
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

மாரியம்மன் கோவில்

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்த்திருவிழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்துவிட்டுச்செல்வார்கள்.

கடந்தஆண்டு கொரோனா வைரஸ்பரவல் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தஆண்டும் கொரோனாவைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் கோவில் திருவிழாக்கள் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடைபெறுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. இதன்காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொடியேற்றம்

இந்நிலையில், கட்டுப்பாடுகளுடன் தேர்த்திருவிழா நடைபெற அரசு அனுமதித்து உள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி காலை 6 மணி முதல் 8.30 மணி வரை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. 

அதைத்தொடர்ந்து காலை 8.30 மணி முதல் இரவு 7 மணிவரை பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று இரவு வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, கேடயத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அபிஷேகமண்டபம் சென்றடைகிறார். 

தேரோட்டம்

இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம்வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷவாகனம், மரகுதிரைவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலை வலம் வந்து அபிஷேக மண்டபம் சென்றடைகிறார். 

வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. அன்று 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுனலக்னத்தில் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து அபிஷேக மண்டபத்தை சென்றடைகிறார். இதில், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.

தெப்ப உற்சவம்

வருகிற 21-ந்தேதி புதன்கிழமை அம்மன் வசந்த மண்டபத்திலிருந்து வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்படுகிறார். 23-ந்தேதி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. 

வருகிற 27-ந்தேதி இரவு 7 மணிக்கு அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து தங்ககமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

Next Story