நெல்லையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்- வீடு வீடாக கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.


நெல்லையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்- வீடு வீடாக கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.
x
தினத்தந்தி 10 April 2021 1:05 AM IST (Updated: 10 April 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது. மேலும் வீடு வீடாக சென்று கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.

நெல்லை, ஏப்:
நெல்லையில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும் வீடு வீடாக சென்று கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.  

கொரோனா அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் புதிய உச்சமாக நேற்று நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் ஏராளமானவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. 
அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலர் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காய்ச்சல் கண்டறியும் முகாம்

இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது வீடுகளை ஒட்டி இருப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது. 
நெல்லை சந்திப்பு சங்கீத சபாவில் மீனாட்சிபுரம் மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டர் சிவா பாக்கியவதி, டாக்டர் சிவசங்கர் ஆகியோர் தலைமையில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடந்தது. இங்கு பொதுமக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை குறித்தும் பரிசோதிக்கப்பட்டது. இதுதவிர அவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மாநகர நல அலுவலர் ஆய்வு

இதேபோல் நெல்லை மாநகரில் உள்ள 9 மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 சிறப்பு குழுக்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் இந்த பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியில் காய்ச்சல் கண்டறியப்பட்டோர் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் கவச உடை அணிந்து வீடு வீடாக சென்று காய்ச்சல் இருக்கிறதா? என தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்தனர். 

அபராதம் 

மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பொதுமக்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் நேரடியாக சென்று கபசுர குடிநீர் வழங்கினர். இதேபோல் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நெல்லை மாநகர பகுதியில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் முககவசம் அணியாமல் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story