சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவலால் 23-ந் தேதி நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்;
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவலால் 23-ந் தேதி நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா
மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமையை பறைச்சாற்றி கொண்டு இருக்கிறது. உலக பிரசித்தி பெற்ற இந்த பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பொது முடக்கம் காரணமாக பெரியகோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதனால் கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்தநிலையில் கொரோனா தொற்று 2-வது அலை பரவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(சனிக்கிழமை) முதல் கோவில் விழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் சித்திரை திருவிழா நடைபெறுமா? என்ற சந்தேகம் பக்தர்களிடம் நிலவியது. இருப்பினும் பல நிபந்தனைகளுக்குட்பட்டு கோவில்களுக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொடியேற்றம்
இதனால் சித்திரை திருவிழாவை எளிமையாக நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கொடியேற்று விழா தஞ்சை பெரியகோவிலில் நேற்றுகாலை நடந்தது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சாமிகள் புறப்பாடு கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது. இதையடுத்து கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். அரசு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு விழா நாட்களில் தினமும் கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடு, சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் என கோவில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரியகோவிலுக்கு வெளியே மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 ராஜவீதிகளில் வருகிற 23-ந் தேதி தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது. தடை உத்தரவு காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2-வது ஆண்டாக
தஞ்சை பெரியகோவிலில் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிதாக தேர் செய்யப்பட்டு 100 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வந்தது. இந்த தேரோட்டத்தில் தஞ்சை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் திருவிழாவாக இருந்து வந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வருகிற 26-ந் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story