கொரோனா வைரஸ் பாதிக்காத 24 கிராமங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிக்காத 24 கிராமங்களில் நோய் எதிர்ப்பு திறனை கண்டறிய 720 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
கொரோனா இல்லாத பகுதிகள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். மேலும் பொருளாதார ரீதியாக மக்கள் பெரும் சிரமப்பட்டனர்.
பின்னர் கொரோனா தாக்கம் குறைந்ததால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவுகிறது.
இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, கொரோனாவால் மீண்டும் வீட்டுக்குள் முடக்கப்பட்டு விடுவோமோ? என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா வைரஸ் பரவாத ஊர்கள் பல உள்ளன. இது பிற பகுதி மக்களை மட்டுமின்றி சுகாதாரத்துறையினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
24 கிராமங்கள்
எனவே, அங்குள்ள மக்களின் நோய் எதிர்ப்புத்திறனை கண்டறிந்தால், கொரோனாவை வெல்வதற்கு புதிய வழி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிக்காத பகுதிகளில் வசிப்போரிடம் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்யும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தலா 30 பேருக்கு ரத்த பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 24 ஊர்களில் இதுவரை கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
அதில் தினமும் 4 ஊர்களில் தலா 30 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக சுகாதாரத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று வீடு, வீடாக ரத்த மாதிரி சேகரித்தனர்.
அந்த வகையில் திண்டுக்கல் அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வை அலுவலர் முகமது கமாலுதீன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பல்வேறு வயதினரை சேர்ந்த 30 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் 24 கிராமங்களிலும் தலா 30 பேர் வீதம் மொத்தம் 720 பேரிடம் ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story