பவானி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி


பவானி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 10 April 2021 4:19 AM IST (Updated: 10 April 2021 4:19 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் இறந்தன.

பவானி
பவானி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் இறந்தன. 
7 ஆடுகள் இறந்து கிடந்தன
பவானி அடுத்த ஜம்பை நல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் (வயது 45). கீரை வியாபாரி. அவருடைய மனைவி தேவி (38). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பட்டி அமைத்து 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கண்ணையன் கீரைகளை பறித்துக்கொண்டு வியாபாரத்துக்காக பவானி சென்றுவிட்டார். தேவி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்காக பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது பட்டியில் அடைக்கப்பட்டிருந்ததில் 7 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும் 4 ஆடுகள் உடலில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. ஆடுகள் அருகே மர்ம விலங்கின் கால்தடம் பதிவாகியிருந்தது. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
செந்நாய்களா?
உடனே இதுபற்றி பவானி போலீசாருக்கு தேவி தகவல் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து அந்தியூர் வனச்சரகர் கருணாகரன் அங்கு வந்து, கால்தடங்களை ஆய்வு செய்தார். இதில் பதிவானது செந்நாயின் கால்தடமாக இருக்கலாம் என்றும், அவை இரவு நேரங்களில் பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியதில் ஆடுகள் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
4 ஆடுகளுக்கு சிகிச்சை
மேலும் கால்நடை டாக்டர்கள் கார்த்திகா, ஆறுமுகம் ஆகியோர் அங்கு வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்த 7 ஆடுகளும் அதே பகுதியில் புதைக்கப்பட்டன.
தொடர்ந்து பவானி போலீசார் அந்தப் பகுதியில் வேறு ஏதும் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதா? என்று கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினரும் மர்மவிலங்கின் நடமாட்டத்தை கண்டறிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story