குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு: பா.ஜனதா கட்சி மாநில நிர்வாகிக்கு கொரோனா- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜனதா கட்சி மாநில நிர்வாகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம்:
முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் (வயது 54) கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 30-ந் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் ஈரோடு மாவட்டம் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.
இந்தநிலையில், சிறையில் இருந்த கல்யாணராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கோபியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு சளி, காய்ச்சல் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மேல் சிகிச்சைக்காக கல்யாணராமனை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கல்யாணராமன் அழைத்து வரப்பட்டு தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, நேற்று காலை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story