லாரி டிரைவர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி


லாரி டிரைவர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 10 April 2021 6:48 PM IST (Updated: 10 April 2021 6:48 PM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடிகளில் லாரி டிரைவர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ்லக்கானி தெரிவித்தார்.

வேலூர்

சுங்கச்சாவடிகளில் லாரி டிரைவர்களுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ்லக்கானி தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

வேலூர் மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக அரசு முதன்மை செயலாளர் ராஜேஷ்லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

 கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராஜேஷ்லக்கானி ஒவ்வொரு துறை அலுவலர்களிடம் தங்கள் துறைகளில் பணியாற்றக்கூடியவர்கள் எத்தனை பேர் என்றும், அதில் 45 வயதுக்கு மேற்பட்ட எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கேட்டறிந்தார். தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி

இந்த மாதம் 25-ந் தேதிக்குள் தங்களது துறைகளில் பணியுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த நாட்களில் அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். 

அனைத்து துறைகளிலும் விடுபட்ட நபர்கள் தடுப்பூசி போட வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடவில்லை. அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொண்டதாக பொய்யான தகவல் தெரிவிக்ககூடாது. பலர் தங்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளது என தடுப்பூசி போட மறுக்கிறார்கள். அவர்கள் தான் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 

போதுமான அளவு தடுப்பூசி இருப்பில் உள்ளதா? என்பதை துணை இயக்குனர் உறுதி செய்துக் கொள்ளவேண்டும். தடுப்பூசி போடுவதற்கு அனைவரையும் தயார்படுத்திய பின்னர் தடுப்பூசி இல்லை என்றால் மீண்டும் அவர்களை தயார் செய்வது கடினம். எனவே இருப்பு குறித்து உறுதி செய்து, தேவைப்பட்டால் தெரிவித்து தேவைக்கு ஏற்ப வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

லாரி டிரைவர்கள், பஸ் டிரைவர்கள் போன்றவர்கள் மூலம் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். சுங்கச்சாவடிகளில் லாரிகளை தடுத்து தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னரே மாவட்டத்துக்குள் வர அனுமதிக்க வேண்டும்.

கட்டாய முககவசம்

மேலும், ஆட்டோ டிரைவர்கள், கார் டிரைவர்கள் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும். நான் வருகிற 17-ந் தேதி மீண்டும் வருவேன் அப்போது 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்ற தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடித்திருக்க வேண்டும்.

மாவட்டத்தில் 60 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 24 நடமாடும் குழுக்கள் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது. நமக்கு 3 குறிக்கோள்கள் உள்ளது. முதலாவது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். 2-வது அனைவரும் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். 3-வது அறிகுறி தென்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்டிப்பு

கூட்டத்தில் கலந்து கொண்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் தங்களது துறையில் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் குறித்த பட்டியலை தெரிவித்தனர். 

அப்போது ஒரு துறையை சேர்ந்த அதிகாரி 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த பட்டியல் தயார் செய்ய முடியாது. அது கடினமான வேலை என தெரிவித்தார். அதைக்கேட்ட ராஜேஷ்லக்கானி முடியாது என்று கூறாதீர்கள், தங்களிடம் உள்ள அவர்களின் ஆதார் அட்டை மூலம் வயதை கண்டறிந்து பட்டியல் தயார் செய்து அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

சரியாக முககவசம் அணியாத அதிகாரிகள்

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் சிலர் தங்களது முககவசத்தை சரியாக போடாமல் இருந்தனர். அதைப்பார்த்த ராஜேஷ்லக்கானி அனைவரையும் சுட்டிக்காட்டி, அதிகாரிகள் நீங்களே முககவசம் சரியாக போடாமல் இருந்தால் மக்கள் எவ்வாறு போடுவார்கள். முதலில் நீங்கள் உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என கண்டித்தார்.

ஆய்வுக்கூட்டம் பகல் 12.15 மணி அளவில் முடிந்தது. அப்போது ராஜேஷ்லக்கானி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மதிய உணவுக்கு இன்னும் நேரம் உள்ளது. எனவே அனைவரும் தங்கள் துறையில் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் குறித்த பட்டியலை உடனடியாக தயார் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். 

அதற்காக, அதிகாரிகளுக்கு உடனடியாக பேப்பர் வழங்கப்பட்டது. அதில் அதிகாரிகள், பட்டியல் குறித்த விவரத்தை குறிப்பிட்டு கலெக்டரின் நேர்முக அதிகாரியிடம் வழங்கிச் சென்றனர்.

கூட்டத்தில் அனைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வீடுகளுக்கு சென்று அறிவுரை

கூட்டம் முடிவடைந்த பின்னர் ராஜேஷ்லக்கானி சத்துவாச்சாரி கங்கையம்மன் கோவில் அருகே நடைபெற்ற தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டார். இதையடுத்து அவர் சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். 

அப்போது அந்த பகுதியில் இருந்த வீடுகளுக்கு அவர் திடீரென சென்று தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து தெரிவித்து, தடுப்பூசி போட்டுள்ளீர்களா? என கேட்டு, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்களையும் மறித்து தடுப்பூசி மற்றும் முககவசம் அணிவது குறித்து எடுத்துக் கூறினார். 

அவருடன் கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

Next Story