மக்கள் நீதிமன்றத்தில் 548 வழக்குகள் தீர்வு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 548 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக, நேற்று மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 3 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகைக்கான ஆணையை வழங்கினார். மக்கள் நீதிமன்ற தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இதில் கூடுதல் சார்பு நீதிபதி செல்வக்குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவள்ளி, மாஜிஸ்திரேட்டுகள் முருகன், முல்லைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பழனி
பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு முதன்மை சார்பு நீதிபதி சுதாகர் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அம்பிகா, மாஜிஸ்திரேட்டு ரகுபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்து வழக்குகளுக்கு தீர்வளித்தனர். இதில் குற்ற வழக்குகள், உரிமையியல் வழக்குகள் என 17 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 81 ஆயிரத்து 700 வசூல் செய்யப்பட்டது.
இதேபோல் நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை என மாவட்டம் முழுவதும் மொத்தம் 8 நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
548 வழக்குகள் தீர்வு
இதில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கேட்ட வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வராக்கடன் வழக்குகள் உள்பட மொத்தம் 906 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் அந்த வழக்குகளில் தொடர்புடைய இருதரப்பினரும் நேரில் வரவழைக்கப்பட்டு சுமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விபத்தில் இழப்பீடு கோரப்பட்ட 71 வழக்குகள் உள்பட மொத்தம் 548 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இந்த வழக்குகளின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.4 கோடியே 53 லட்சத்து 13 ஆயிரத்து 129 இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story