தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 221 வழக்குகளுக்கு தீர்வு ரூ.2.90 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டத்தில்நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 221 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2.90 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 221 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2.90 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி லோகேஷ்வரன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருச்செந்தூரில் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் தலா ஒரு அமர்வு உள்பட மொத்தம் 12 அமர்வுகளில் நடைபெற்றது. இதில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், போக்சோ நீதிமன்ற நீதிபதி குமார் சரவணன், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி உமா மகேஸ்வரி, சார்பு நீதிபதிகள் சாமுவேல் பெஞ்சமின், மாரீஸ்வரி, வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவர் சோமசுந்தரம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கர், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆப்ரீன் பேகம், நீதித்துறை நடுவர்கள் உமாதேவி, ராஜ குமரேசன் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வக்கீல்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரூ.2.90 கோடி இழப்பீடு
இதில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 159 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 64 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் தீர்வு தொகை ரூ.47 லட்சத்து 200 ஆகும்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 368 வழக்குகளில் 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரத்து 900-ம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 527 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 221 வழக்குகள் தீர்வு காணப்பட்டடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 கோடியே 90 லட்சத்து 79 ஆயிரத்து 900-ம் இழப்பீடாக வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின செய்திருந்தார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி சப்-கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. நீதிபதி அகிலா தேவி தலைமை தாங்கினார். விரைவு கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு பரத்வாஜ் ஆறுமுகம், மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒரே நாளில் 347 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 27 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
இதில் அரசு வழக்கறிஞர் முருகேசன், வக்கீல்கள் இளங்கோ, மகேந்திரன், சிவா, சுந்தரபாண்டியன், ராஜேஸ்வரி, அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story