தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 564 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 564 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 10 April 2021 9:24 PM IST (Updated: 10 April 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், திண்டிவனம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 564 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான இளவழகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் மொத்தம் 787 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

450 வழக்குகளுக்கு தீர்வு

இம்முகாமில் நீதிபதிகள் சந்திரன், சங்கர், கோபிநாதன், ஜெகதீசன், மாஜிஸ்திரேட்டுகள் அருண்குமார், பூர்ணிமா, வக்கீல்கள் கருணாகரன், வேலவன், செந்தில்குமார், பன்னீர்செல்வம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.
இதன் முடிவில் 450 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.9 கோடியே 13 லட்சத்து 46 ஆயிரத்து 240-க்கு தீர்வு காணப்பட்டது.

திண்டிவனம் 

திண்டிவனத்தில் சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முகாமிற்கு, சட்ட பணிகள் குழு ஆணை தலைவர் ராஜசிம்மவர்மன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி பிரபாகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சவுந்தர்யா, 2-வது குற்றவியல் நடுவர் நளினிதேவி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வாசுதேவன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு கண்டனர். முகாமில் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் விஜயன், திண்டிவனம் வழக்கறிஞர் நல சங்க செயலாளர் கிருபாகரன், மூத்த வக்கீல்கள்  ஆதித்தன், ஸ்ரீதர், சுவாமிநாதன், சிவசுப்ரமணியம், தேசிங்கு, வினோத், கிஷோர், அஜ்மல் அலி, சக்கரவர்த்தி, சங்கர், விழுப்புரம் நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் குற்றவியல் நீதிமன்றத்தில் 42 வழக்குகள், 42 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 4 சிவில் வழக்குகள் என மொத்தம் 114 வழக்குகள்  சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 40 லட்சத்து 24 ஆயிரத்து 630-க்கு தீர்வு காணப்பட்டது.

Next Story